செவ்வாய், 16 டிசம்பர், 2025

‘குடியை’ அறிவோம்...

‘குடியை’ அறிவோம்...

சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு “சோற நாடு” ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர்.

இங்கே செவி வழி கேட்ட, உணர்ந்த செய்திகளை பதிவிடுகிறேன்.

குடந்தையைச் சுற்றி உள்ள சிற்றூர்களின் பெயர்கள் அதற்கான காரணங்களை ஆராயும்போது ஒரு ஒற்றுமையை காண முடிகிறது.

அவ்வாறே சோழ நகரத்திற்கு ‘பழையாறை’ தலை நகரமாக விளங்கி இருக்கிறது. அதற்கு ஆதாரமாக அரண்மனைக்காரத்தெரு, ஆரியப்படையூர், காவல்காரன் தெரு, பம்பப்படையூர் போன்ற பெயர் உடைய தெருக்களும், கிராமங்களும் கோயில் நகரை அலங்கரிக்கின்றன.

மேலும் சில விவரங்கள்:-

‘மாதுளம் பேட்டை’ என்பது “மகாதளம் பேட்டை” என்ற சொல்லின் மருவுதல் எனக் கொள்ளலாம்.

மகா தளம் பேட்டை அருகில் ஆனைக்காரன்பாளையம் உள்ளது.

இதுவே யானை படைக்கான தளமாகவும் இருந்து இருக்கக் கூடும்.

எனவே நம் முன்னோர்கள் பல படைகளை அமைப்பதற்கு மகா தளம் அமைத்து அதை “பேட்டை” என்று அழைத்தனர்.

மேலும் குடந்தையையின் வரலாற்று, தொழில் மற்றும் வணிகச் சான்றுடைய அடையாளங்கள்:

1. பழைய அரண்மனைத்தெரு,

2. கம்பட்ட (நாணயம், நிதி தொடர்புடைய) விஸ்வநாதர் தெரு,

3. பஞ்சுக்காரத்தெரு,

4. நெல்லுக்கடைத்தெரு,

5. வேம்படித் தெரு (பித்தளை வியாபாரம்)

6. காசுக்காரத்தெரு,

7. அந்தணர்கள் குடியிருப்பு பகுதிகள்

A. சோலையப்பன் தெரு,

B. பக்த புரித்தெரு,

C. வேத பாடசாலை போன்றவை.

அரசலாற்றங்கரையில் நெசவாளர்கள் குடியிருப்பு நடந்து இருக்கிறது. அங்கே ‘சவுராஸ்டிரா மக்கள்’ அதிகம் வாழும் பகுதி. அவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தது தான் - “ராஜ ராஜேந்திரப் பேட்டை கூட்டுறவு சங்க பண்டகசாலை.”

இப்படியாக செம்படியான் தெரு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக சோழ மன்னர்கள் “குடிகளாக மக்களை” பிரித்து அவர்கள் செய்யும் தொழிலை வைத்து குடி அமர்த்தினர் என்று சொல்லலாம்.

ஆரிய படையூர் என்ற சிற்றூரில் “சோழன் மகாதேவின் சிலை” இருப்பதாக கூறுகின்றனர்.

உடையாளுர் - பட்டீஸ்வரம் போகும் வழியில் சில சிவன் கோயில்களை பார்க்கலாம் - பாழடைந்த நிலையில்!!

அவைகள் யாவும் ஊர் “பிரபுக்கள் மற்றும் நிழக்கிழார்” வாழ்ந்து மறைந்த நினைவுச்சின்னங்கள்.

இது மந்திரிகள் போன்றோரையும் உள் அடக்கும். அவர்கள் ராஜராஜ சோழனிடம் (ராஜாவிடம்) பணியாற்றியதற்கு மரியாதை நிமித்தமாக உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

மேலும் பல உதாரணங்கள்:

இன்றும் ‘திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள தென்னத்தோப்பில் குட்டிக் கோயில்களை பார்க்கலாம்’ - இவைகள் யாவும் ஆதீன கார்தாக்கள் மறைவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்கள்.

நன்றி: பொருளாளர்,
“சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக