இடத்திலிருந்து இருப்புக்கு

“இடங்களின் ஒழுங்கமைவுகளை
நாம் கட்டுவதில்லை
அவை இடங்களாக இருப்பதாலேயே
ஒழுங்கமைவுகளாகவும் இருக்கின்றன”
மனுஷ்யபுத்திரன்
OOO
சென்றவாரம் எங்கள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி 3 நாள் பயணமாக முதல்முறையாக பெங்களூரு வந்திருந்தார். அவர் லண்டனில் வசிக்கும் 50 வயது நிரம்பிய ஒரு ஜமைக்கப் பெண். வேலைப்பளுவினால் அலுவலகத்திற்குள் சிறு தொய்வுற்று காணப்பட்டாலும், அலுவலகத்திற்கு வெளியில் நகரத்தை சுற்றி பார்க்கும் போது மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அதைப்பற்றி வினவியபோது அவர், முன்பு சென்ற மற்ற நகரங்களில் தான் ஒரு மற்றமையாக (other) உணரப்பட்டதாகவும், பெங்களுருவில் தன்னிலையை (self/subjectivity) உணர்வதாக கூறினார்.ஜமைக்காவை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவில் இந்த உணர்வை அடைந்ததற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? இன்றைய நவீன மனிதன் பல்வேறு இடங்களில், வெல்வேறு கலாச்சார அம்சம் கொண்ட சமூகங்களில் வாழும் சாத்தியம் உருவாகி வந்துள்ளது, அவ்வாறிருக்கையில் ஒரு மனிதன் தன்னை தானாக(self) உணர்வதற்கான காரணிகள் என்ன?
மனிதனின் இருப்பை விசாரணை செய்த அறிவியல் கொள்கைகள் மனிதனையும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பருப்பொருட்களை போல கால வெளியில் கொண்டுள்ள இடம், எடை, திணிவு போன்ற அளவீட்டை கொண்டு புறவயமாக அறிந்துகொள்ள முடியும் என்று எண்ணி ஆராய்ந்து வந்தன.
பருப்பொருட்களின் பௌதீக கூறுகள் நிலைக்கொண்டால் அவை சமநிலையில் உள்ளன. ஆனால், உடலின் பெளதிக கூறுகள் நிலைக்கொண்டாலும் மனிதன் சமநிலைக் கொள்வதில்லை. தன்னிலையை(self) அறிய முடியாது விலக்கமும், பதற்றமும் கொள்வதை அறிவியல் கொள்கைகளை கொண்டு விளக்க முடியவில்லை. அதுவரையில் நம்பப்பட்டு வந்த அறிவியல் கொள்கையின் படி, தூல உடல் என்பது பௌதிகமானது. மனிதனை வெறும் தூல உடலாக அணுகிய அறிவியல் கொள்கைகள், தத்துவங்கள் எல்லாம் முடிவில் பொருள்முதல்வாத (materialistic) சிந்தனையை முன்வைப்பவையாகவே இருந்தன. பொருள்முதல்வாதம் மனித இருப்பின் தன்னிலையை கணக்கில் கொள்ளாமல் அதை ரத்து செய்துவிட்டது. அதற்கு பின் வந்த புலனறிவுவாத(empiristic) கொள்கைகளோ பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தூல உடல் கொண்டுள்ள புலன்களின் கூறுகளுக்குள் சுருக்கி விடுகிறது, அதிலும் மனிதனின் தன்னிலையை ஆராய வழியில்லை. இன்னொரு புறம், கருத்துமுதல்வாதமோ இந்த புவியில் நடக்கும் எந்த விஷயத்தையும் உண்மையாக நம்பத் தலைப்படவில்லை.
இந்த புள்ளியில் இருந்தே மனித இருப்பு பௌதிகமான தூல உடலால் (inert body) மட்டும் ஆனதல்ல, வேறு அம்சம் உள்ளது என்ற சிந்தனை முளைத்தெழுகிறது. அந்த அம்சம் தூயக் கருத்தாகவும் எண்ணப்படவில்லை. உடலுக்கும்-இருப்புக்கும்-தன்னிலைக்கும் உள்ள தொடர்பை விசாரனை செய்த இருபதாம் நூற்றாண்டின் முக்கிய சிந்தனையான தோற்றவியலை(phenomenology) விரிவு செய்த தத்துவ அறிஞரான பொன்டி (Maurice Merleau-Ponty) மனிதனின் தன்னிலையை தூல உடலை மட்டும் வைத்து புரிந்துகொள்ள முடியாது, அதை அவன் வாழும் உடல் (living body) கொண்டே அறிய முடியும் என்கிறார்.
தூல உடலை போல் அன்றி, வாழும் உடல் என்பது, தான் அமைந்துள்ள சூழலில் இருந்து செறிவான அனுபவங்களை உருவாக்கிக்கொள்ளும் சாத்தியங்களை கொண்டது. புறவய யதார்த்தங்களில் இருந்து, இருப்பின் இயல்பை அறியக்கூடியது. தூல உடலுக்கு அளிக்கப்படும் இடம் (place) எனும் பௌதிக அணுகுமுறை புறவெளியை(outer space) முதன்மைப்படுத்தி, அதிலிருந்து அவ்வுடல் எனும் பருப்பொருள்(object) கொண்டிருக்கும் இடம் நோக்கி கணக்கிடுவது. புறவயமானது, ஓர்முக சிந்தனை கொண்டது, பொருள் கொண்டுள்ள நிலை அடிப்படையில் (objective,homogeneous & positional) சிந்திப்பது. நாற்காலி அறையின் சுவரில் இருந்து இரண்டடி தூரத்தில் இருக்கிறது என வகுப்பது போல.
பௌதீக அணுகுமுறை மனித இருப்பை பற்றற்று விலகி, தள்ளி நின்று பார்க்கிறது. கூகுள் வரைபடத்தில் நாம் இருக்கும் இடத்தில் இருந்து போக விரும்பும் இடத்தை செயற்கைக்கோள் விழிவழியாக மேல் நோக்கு பார்வை கோணத்தில் இரண்டு தொடர்பற்ற புள்ளிகளாக காண்பது போல. ஆனால் மனிதனின் இருப்பை உணரச்செய்யும் வாழும் உடல் தான் அமையபெற்றுள்ள நோக்குநிலையில் (oriented) இருந்து வெளியை உருவகிக்கும் சாத்தியம் கொண்டது. தன்னிலையை, இந்த வெளியால் உருவாக்கப்படும் அனுபவம் கொண்டு மட்டுமே உணரக்கூடியது. அதே கூகுள் வரைபடத்தில் பிரயாணத்தை தொடங்கியபின், தொடங்கும் புள்ளி நம் நோக்குநிலையின் அடிப்படையில் சுற்றத்துடன் வெளிப்பட்டு விரிவதை (projected) போல. இது அனுபவத்தால் வடிவம் பெரும் உலகம்.
இந்த உலகில், வாழும் உடல் ஒரு குறிப்பிட்ட வழியில் உறுதியாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதன் பொருட்டு அர்த்தம் கொள்கிறது. இவ்வுலகம் நம் அனைவராலும் பகிரப்பட்டு, ஒவ்வொருவரும் உறுதியாக ஈடுபட்டுகொண்டிருக்கும் ஒன்றாகும் (being-in) . எ.கா. கல்லூரி வகுப்பறையில் பேராசிரியர். ஒரு பேராசிரியராக இருப்பதன் அர்த்தத்தை உருவாக்கும் கல்வி உலகின் நடைமுறைகளில் ஒருவர் எவ்வாறு ஈடுபட்டுள்ளார் என்பதை குறிக்கிறது – மாணவர்களுக்கு விரிவுரை வழங்குதல், தேர்வுத்தாள்களை மதிப்பிடுதல் போன்றவை. எனவே உலகம் என்பது மனிதன் கொண்டிருக்க கூடிய அல்லது விட்டு விடக்கூடிய ஒரு தற்செயலான விருப்பத்தேர்வு அல்ல. மனிதனாக இருப்பதன் காரணத்திற்கும், அவன் இருப்பிற்கும் அவசியமானது.
உலகம் என்பதை வழக்கமான அர்த்தத்தில் ஒரு இடஞ்சார்ந்த கொள்கலன் (spacio-temporal container) அல்லது பொருட்களின் கூட்டுத்தொகையாக புரிந்து கொள்வது முழுமையானதன்று. மாறாக, இதுவே நாம் வாழும் இடம். இது நம் வாழ்க்கையின் அர்த்தத்தை கொண்டிருக்கும் பொது அமைப்பாகும். இதையே பொன்டி (Maurice Merleau-Ponty) “என் இருப்பை திட்டவட்டமாக எடுத்துக்கொண்டால், இந்த வாழும் உடலில் இருந்தும் உலகில் இருந்தும் பிரிக்கமுடியாதது அது” என்கிறார் . பொன்டி (Maurice Merleau-Ponty) தன்னுடைய உணர்தலின் தோற்றவியல் (phenomenology of perception) நூலில், மனிதனுக்கான உலகம் என்பது வெறும் வடிவியல் இடமோ, அல்லது பொருட்களின் எடையை தாங்கிக்கொண்டிருக்கும் பிராந்தியமோ அல்ல, அது அவனுக்கான தனித்துவமான களம் (field). அதுவே அவன் இருப்பை உறுதிப்படுத்தும் பின்னணி என்கிறார்.
இங்கு களம் என்ற சொல்லாட்சி முக்கியமானது, ஏனென்றால் அதுவே நாம் அக்கறை கொண்டுள்ள இடம்சார்ந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. கால்பந்து விளையாட்டு களம் என்பது கீழே பரவியுள்ள ஒரு நிலம் அல்ல, அதுவே விளையாட்டுவீரனாக உணர வைப்பது. நாம் அமைந்துள்ள களத்தில் புலனுணர்வுகளின் ஈடுபாட்டின் முதன்மையே முதலில் நமக்கு விஷயங்களைப் பற்றிய விஞ்ஞான பார்வையை ஏற்றுக்கொள்வதை சாத்தியமாக்குகிறது. அனைத்து பகுத்தறிவு, மதிப்பு மற்றும் இருப்பிற்கும் முன்கூட்டியே அனுமானிக்கப்பட்ட அடித்தளமாக அது அமைந்துள்ளது. நாம் உணர்வது ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முழுமை, அங்கு புலனுணர்வு சார்ந்த ஒன்று எப்போதும் வேறொன்றின் நடுவில் இருக்கும், அல்லது வேறு ஏதோ ஒரு களத்தின் பகுதியாகவோ இருக்கும். எனவே தனிமைப்படுத்தப்பட்ட பொருள் அல்லது தோற்றம் என்று எதுவும் இல்லை.
ஒரு கதவு என்பது சுவரில் இருக்கும் ஒரு திறப்பு மட்டும் அல்ல; அது “உள்” மற்றும் “வெளி” எனும் இரண்டு இடங்களை இணைக்கும் செயல்பாடாகும். கதவின் பொருள், அது இருக்கும் இடத்துடனான உறவில் உருவாகிறது. அதே கதவு உடைந்து வெளியே கிடக்கும்போது, அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. ஒருங்கிணைந்த முழுமையில் உள்ள உணர்வுகளுடன் தொடர்புறுத்தப்படும் படும் போது மட்டுமே ஒரு தனி உணர்வு அர்த்தமுள்ளதாக அமைகிறது. பொருட்களின் அர்த்தம் நாம் அமைந்துள்ள மற்றும் சம்பந்தப்பட்ட உணர்வுகள் மூலம், இந்த உடல் பொது இடத்துடன் கொண்டுள்ள நோக்குநிலையால் வெளிப்படும் விஷயங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கையாளுவதன் மூலமும் தன்னிச்சையாக ஒன்றிணைகிறது. என் வீட்டருகே இருக்கும் காட்டு வாகை வெறும் நிழற்குடை மட்டும் அல்ல. அந்தி நேரத்தில் நண்பர்களுடன் கூடும் சபை, ஓய்வு நேரத்தில் புத்தகம் வாசிக்கும் இடம், அடர்மழையில் சில்லென சாரலில் ஒதுங்கும் இடம், இப்படி பல.
பொருட்களுடன் நமக்கு உள்ள எந்தவொரு கருத்தியல் உறவும் நம் சொரூபம் கொண்டிருக்கும் உணர்வுக்கும் உலகத்திற்கும் இடையிலான தடையற்ற இயங்கியல் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டது. பொன்டி இக்கருத்தை உடல் வடிவமைப்பு (bodily schema) என்ற தத்துவப்பார்வையின் வழியாக விளக்குகிறார். அவர் பார்வையில் மனித அனுபவம் என்பது சிந்தித்து,பிரதிபலித்து உருவாவதில்லை. மாறாக அது சிந்தனைக்கு முந்தைய உணர்வுச் செயல்பாடு. ஓர் அடிப்படை ஒழுங்கமைவு. மனித உடல் புறவுலகத்துடன் கொண்டிருக்கும் புலனியக்கம் சார்ந்த பற்றுதலே நம் அடிப்படை அனுபவத்தை நிர்ணயிக்கிறது. உலகுடனான நம் உறவு சிந்தனையை மட்டும் சார்ந்ததல்ல. அது உடல் வழியே நிகழும் ஒரு கூட்டு விளைவு. இதனால், சிந்தனைக்கு முந்தைய அனுபவங்களும் அவற்றில் உறையும் அர்த்தங்களும் இணைந்த ஒரு சிக்கலான வலை நம் இருப்பின் பகுதியாக உள்ளது.
மனிதன் அமைந்துள்ள மற்றும் உருவகப்படுத்தப்பட்ட நோக்குநிலை கொண்ட உலகில் உள்ள விஷயங்களை உடல் வடிவமைப்பு (bodily schema) மூலம் உணர்கிறான் என்றால், அந்த நோக்குநிலை விசர்ப்புத்தி, இன வேறுபாடு, பாலியல் வேறுபாடு, உடல் ஊனமுற்றோர் போன்ற பிற உடல் வடிவமைப்பு கொண்டவர்க்கு என்னவாக இருக்கும்? இத்தகைய உடலியல் அம்சங்கள் அவர்கள் உருவகப்படுத்தப்பட்ட வழிகளைத் தேர்வுசெய்வது மட்டுமல்லாமல், தன்னிலைக்கும் உலகத்திற்கும் இடையிலான இயங்கியல் ஒருங்கிணைப்பை சீர்குலைக்கம் வாய்ப்பையும் கொண்டுள்ளது.
பிரெஞ்சு ஆதிக்க காலனியில் குடியிருந்த கறுப்பினத்தை சேர்ந்த மனநல மருத்துவரும், இருத்தலியல் தத்துவ வாதியுமான பிராண்ட்ஸ் பானொன் (Frantz Fanon) நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உலகத்தின் மீதான முன்பகிரப்பட்ட உணர்வு, காலனித்துவ மக்களுக்கு அதே வழியில் இருப்பதில்லை என்கிறார். பொது இடத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய குழந்தை கைநீட்டி கறுப்பர் என அழைக்கும் போது தன் இருப்பு உடைக்கப்படுகிறது. ஒரு வெள்ளை ஐரோப்பிய உலகத்தை இணைக்கும் பகிரப்பட்ட அர்த்தங்கள் மற்றும் ஊடும்பாவுமாக நெய்யப்பட்ட நடைமுறைகளில் இருந்து தான் வலுக்கட்டாயமாக விடுபட்ட இழை போல உணர்வதாக குறிப்பிடுகிறார். இதன் காரணமாக குழப்பத்துடனும், அந்நியமயப்படுத்தப்பட்டும், அசையமுடியாதவராகவும், செயலற்று இருப்பதாகவும் உணர்வதாக கூறுகிறார். இதனால் உலகதிற்குள் விரிந்து செல்லும் வாய்ப்பு தடைபட்டு, பொது செயல்களில் ஈடுபடமுடியாமல் போவதாகவும், மொத்தில் அவர் ஒரு பொருளாக மாற்றபட்டு தன்னிலையை இழந்தாக உணர்கிறார். உடல் வடிவமைப்பைகொண்டு பொது சூழலில் உள்ள அர்த்தத்துடன் ஒருங்கிணைந்து வாழும் உடலின் அனுபவங்களை பெருக்கிகொள்ளும் சாத்தியம் அமையப்பெற்ற சூழலில் மனிதன் தன்னிலையை உணர்கிறான். வாழும் உடலுக்கான சாத்தியங்கள் அகற்றபட்டு வெறும் தூல உடலாக மட்டுமே எஞ்சக்கூடிய உலகில் மனிதன் மற்றமை ஆகிறான்.
இந்தியா வந்த ஜமைக்காவைச் செர்ந்த பெண் தன்னிலையை உணர்ந்ததற்கு காரணம் என்ன? அதை இன்னொருவரால் அறிய முடியாமலேயே போகலாம். ஏனென்றால் தன்னிலை என்பது பிரக்ஞை அறியும் உண்மை அல்ல. வாழும் உடல் அறியும் உண்மை.

விவேக்
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலக்கியம் மற்றும் தத்துவத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக