வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

வியட்நாம் போர் எப்படி நடந்தது தெரியுமா?

வியட்நாம் போரில் அமெரிக்காவின் நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?

https://youtu.be/Lv1GEj4FsGA?si=8jUkiTWoW2fr4Cjw

 பகல் முழுவதும் நான்தான்டா இங்க ராஜா என்று கெத்தாகத் திரிவார்கள். ஆனால் சூரியன் மறைந்து இருட்டானால் போதும், அம்மாடி... எவன் எங்கிருந்து சுடுவான்னு தெரியலையே என்று பதுங்குழிக்குள் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம், சைகோன் நகருக்கு அருகே இருந்த 'கு சி' (Cu Chi) என்ற பகுதி.

அமெரிக்கா தனது மிகப்பெரிய படைத்தளங்களில் ஒன்றை இந்த 'கு சி' பகுதியில்தான் அமைத்திருந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் என ஒரு மினி அமெரிக்காவே அங்கே இருந்தது. ஆனால், ஒரு விசித்திரமான பிரச்சனை. தினமும் இரவு நேரத்தில், முகாமிற்குள் இருக்கும் அமெரிக்க வீரர்கள் திடீர் திடீரென கொல்லப்படுவார்கள். ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கிகள் காணாமல் போகும். சமையலறையில் இருந்து சாப்பாடு திருடு போகும்.

டேய்... காம்பவுண்ட் சுவர்ல ஒரு ஈ கூட நுழைய முடியாது. அப்புறம் எப்படிடா உள்ள வந்து அடிக்கிறான்? ஒருவேளை பேய் பிசாசா இருக்குமோ? என்று அமெரிக்கத் தளபதிகள் குழம்பிப் போனார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அமெரிக்காவுக்கு அந்த அதிர்ச்சியான உண்மை தெரிந்தது. அவர்கள் இத்தனை நாளாக மிதித்துக் கொண்டிருந்தது வெறும் மண்ணை அல்ல. ஒரு பாதாள உலகத்தை!

ஆம், வியட் காங் வீரர்கள் அந்தப் பகுதி முழுவதும் பூமிக்கடியில் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுரங்கப் பாதைகளை அமைத்திருந்தார்கள்.

சும்மா ஏதோ எலி வளை போல நினைத்துவிடாதீர்கள். அது ஒரு நிலத்தடி நகரம்!உள்ளே மருத்துவமனைகள் இருந்தன. சமையலறைகள் இருந்தன (புகை வெளியே தெரியாதபடி விசேஷமாக வடிவமைக்கப்பட்டது). ஆயுதக் கிடங்குகள், மீட்டிங் ஹால்கள், ஏன்... கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒரு தியேட்டர் கூட உள்ளே இருந்தது!

யோசித்துப் பாருங்கள்... மேலே அமெரிக்க வீரர்கள் கேன்டீனில் பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நேர் கீழே, பத்து அடி ஆழத்தில் வியட் காங் வீரர்கள் அடுத்த தாக்குதலுக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பார்கள். வரலாற்றின் உச்சபட்ச அத்துமீறல் இதுதான்! இந்தச் சுரங்கங்களைக் கண்டு அமெரிக்கா மிரண்டு போனது. இதை அழிக்க அவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் காமெடி ரகம்.

வானத்தில் இருந்து பி-52 பாம்னர்களை வைத்து குண்டுகளைப் போட்டார்கள். அது மேலே இருந்த மண்ணைக் கொஞ்சம் கிளறியதே தவிர, ஆழத்தில் இருந்த சுரங்கங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. சுரங்கங்களுக்குள் விஷவாயுவைச் செலுத்தினார்கள். நதிநீரைத் திருப்பிவிட்டார்கள். ஆனால், வியட்நாமியர்கள் புத்திசாலித்தனமாக Water Trap (தண்ணீர் உள்ளே வராமல் தடுக்கும் மடிப்புகள்) மற்றும் காற்றோட்ட வசதிகளை வைத்திருந்ததால் இதிலிருந்தும் தப்பித்தார்கள். வேறு வழியே இல்லை. எலியைப் பிடிக்க எலியாகத்தான் மாற வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அமெரிக்கப் படையில் இருந்த ஒல்லியான, குள்ளமான வீரர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு Tunnel Rats என்று பெயர். கையில் ஒரு டார்ச் லைட், ஒரு பிஸ்டல், வாயில் ஒரு கத்தி. இதை வைத்துக்கொண்டு அந்த இருட்டுச் சுரங்கத்திற்குள் இறங்க வேண்டும். உள்ளே போனால் கொடிய விஷப் பாம்புகள், தேள்கள், விதவிதமான கண்ணிவெடிகள்... இதையெல்லாம் தாண்டினால், ஒரு மூலையில் வியட்நாமிய வீரர் ஏகே-47 உடன் காத்திருப்பார். நரகத்தின் வாசல் அது!

இதில் வேடிக்கை என்னவென்றால், மேலே இருந்த அமெரிக்க முகாமில் இருந்து திருடப்பட்ட ஆயுதங்கள், மருந்துகள் மற்றும் உணவைக் கொண்டுதான் கீழே இருந்த வியட் காங் வீரர்கள் உயிர் வாழ்ந்தார்கள். அமெரிக்காவின் சப்ளையிலேயே, அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள்! இறுதியில், அந்தச் சுரங்கங்களை முழுமையாக அழிக்க முடியாமல், அந்தப் பகுதியைக் காலி செய்துவிட்டு ஓடியதுதான் அமெரிக்கா கண்ட மிச்சம்.

என்னிடம் பெரிய பீரங்கி இருக்கிறது, உலகையே அழிப்பேன் என்று அமெரிக்கா மார்தட்டியபோது, என்னிடம் ஒரு மண்வெட்டி இருக்கிறது, நான் என் மண்ணைக் காப்பேன் என்று ஒரு சிறிய தேசம் நிரூபித்த வரலாற்றுச் சின்னம் தான் இந்த கு சி சுரங்கங்கள்!

- Abdullah Ibnu Naseer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக