சனி, 17 ஜனவரி, 2026

கல்மண்டபம்

"கல்மண்டபம் " நாவலை வழக்கறிஞர் சுமதி அவர்கள் வெளியிட்டு நேற்றோடு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அலையன்ஸ் பதிப்பக வெளியீடு. தமிழின் நாவல் உலகப் பிரதேசத்தில் இதுவரை யாரும் தொடுவதற்கு அஞ்சிய ஒரு கதைக் கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய சுமதியின் துணிச்சல் சாதாரணமானது அல்ல. பிராமணர்களின் இறுதிச் சடங்குகளை செய்யும் சவுண்டி பிராமணர்களின் அவல நிலையையும், அவர்களை இழிவாக நடத்தும் உயர்தட்டு பிராமணர்களையும் மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டும் நாவல் இது.இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்து விவாதங்களை எழுப்பி இருக்க வேண்டிய சுமதியின் நாவல்  கவனமாக இலக்கிய உலகத்தால் சைட்லைன் செய்யப்பட்டது.
சென்னையில் சவுண்டி பிராமணர்கள் ஒன்று சேர்ந்து வேலைக்காக காத்திருக்கும் இடம்தான் கல் மண்டபம். அதையே இந்த நாவலின் தலைப்பாக சுமதி அவர்கள் வைத்திருந்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் சோ, இல. கணேசன், தமிழருவி மணியன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருடன் நானும் மேடையைப் பகிர்ந்து கொண்டு நான் பேசிய பேச்சை இன்று நினைத்துப் பார்க்கிறேன் .  
 " இந்துக்கள் தங்கள் ஜாதி விஷம் கலந்த மூச்சுக்காற்றினால் மொத்த வாயு மண்டலத்தையும் அசுத்தப்படுத்தி விட்டார்கள். அசுத்தப்படுத்தப்பட்ட அந்த காற்றை சுவாசித்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஜாதி நோய்க்கு ஆளாகி விட்டார்கள். நாடார் கிருத்துவர்களும் வேளாளர் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வந்தார்கள்? இயேசு சொன்னதாகத் தெரியவில்லையே? லெப்பைகளும் மரைக்காயர்களும் எங்கிருந்து வந்தார்கள்? நபிகள் நாயகம் சொன்னதாகத் தெரியவில்லையே. அப்படியானால் இந்து மதம் இந்து சமூகத்தை மட்டும் கறை படுத்தவில்லை. மொத்த இந்திய சமூகத்தையும் மாசு படுத்தி இருக்கிறது." என்று மேடையில் சோ, இல.கணேசன் , தமிழருவி மணியன் ஆகியோரை வைத்துக் கொண்டு நான் பேசியதற்கு எனக்குப் பின் பேசிய அவர்கள் ஏதும் பதில் சொல்லவில்லை.
 எனக்குப் பின் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி சுமதி நாவல் பற்றி மிக அற்புதமாகப் பேசினார்.
 வேலை பளுவின் காரணமாக அடுத்த நாவலை எழுதுவதைத் தள்ளிப் போட்டு வரும் சுமதி விரைவில் தனது அடுத்த அபூர்வமான கதைக்கருவை எழுத வேண்டும் என்று எல்லா புத்தகங்களையும் தேடிப் படிக்கக்கூடிய  
 ஒரு ஓரத்து வாசகன் என்ற வகையில்
 நான் விண்ணப்பம் வைக்கிறேன்.